Saturday, November 6, 2010
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பக்கவாத நோய்க்கான காரணம்
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களே பக்கவாத நோய் ஏற்பட வழிவகுக்கிறது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். உலக பக்கவாத நோய் எதிர்ப்பு நாள் கடந்த மாதம் 29 ம் தேதி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் பக்கவாத நோய் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.இந்தியாவில் இந்நோய் அண்மைகாலமாக அதிகரித்துவருவதாக டாக்டர்கள் கூறியுள்ளார்.
முன்பெல்லாம், 50 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் பக்கவாத நோய் தாக்கும். ஆனால், அண்மைக்காலமாக 20 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களை இந்நோய் அதிகமாக தாக்கத்தொடங்கியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், தோராயமாக 130 முதல் 225 பேருக்கு இந்நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில், ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இதனால், முறையான சிகிச்சை எடுக்க தவறிவிடுகின்றனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மனித மூளையின் ஒரு பகுதி செயலிழப்பதால், பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால், உடலின் ஒரு பகுதி செயல் இழந்து, உடல் உறுப்புகள் இயங்காமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேச முடியாமலும் போகிறது. இதற்கு உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
ஆனால், இதுபற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. இந்தியாவில், தற்போது, 14 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் தற்போதைய மக்கள் தொகை 1.3 கோடி. இவர்களில், 30 ஆயிரம் பேருக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 30 முதல் 35 சதவீதம் பேர் உயிரிழக்க நேரிடுகிறது.இன்றைய காலக்கட்டத்தில், இளம் வயதினர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உடலில் அதிகம் கொழுப்பு சேருவது, புகைப்பழக்கம், மதுப்பழக்கங்கள் போன்றவை இந்நோய் ஏற்பட காரணமாகின்றன.
எளிய உடற்பயிற்சிகள் கூட பலர் செய்வதில்லை. குறிப்பாக, இப்போதுள்ள இளைஞர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற பழக்கப்பட்டு விட்டனர். சிறிய தூரம் சென்று வருவதற்குகூட மோட்டார் சைக்கிள் இல்லை என்றால் ஏதோ இழந்துவிட்டதை போல் நினைக்கின்றனர். நடைபயிற்சி என்பது இல்லாமல் போய் விட்டது. மேலும் எப்போதும் கம்ப்யூட்டர் , "டிவி' முன்பு உட்கார்ந்துவிடுகின்றனர். உடம்புக்கு வேலை கொடுக்காததால் அவதிக்குள்ளாகின்றனர்
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment