புது தில்லி, ஜூலை 13: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு அளிக்கப்பட்டுவரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கெனவே 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தன்னார்வ அமைப்பு சார்பில் 1993-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கும் வரையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா மற்றும் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திர குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் இந்த மனுவை மீண்டும் விசாரித்தது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர் என்ற விவரத்தை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அப்போது உத்தரவிட்டனர்.
அரசின் அறிக்கைக்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், இடஒதுக்கீட்டை முழுமையாக மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள், இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு விரும்பினால் மண்டல் கமிஷன் பரிந்துரை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் உள்ள சில வழிகாட்டு நடைமுறைகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தலாம். அதுவரை ஏற்கெனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கர்நாடக அரசு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 73 சதவீதம் அளித்து வருகிறது.
மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு இதே வழக்கின்போது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
எனினும் பரிந்துரைக்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்க விரும்பினால் புதிய தகவல்களின் அடிப்படையில் சட்டத் திருத்தம் மேற்கொண்டு அமல்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Tuesday, September 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment