ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெல்பர்ன் நகரில் வாக்கிங் சென்ற 21 வயது இந்தியர் மீது 4 இளைஞர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இந்தியர்கள் மீது நிறவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலருக்கு கத்திக்குத்து விழுந்தது. இரண்டு பேர் உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. போலீஸ் நடவடிக்கையை தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் குறைந்தன. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு மேல்படிப்புக்காக செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக குறைந்தது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மெல்பர்ன் நகரில் இந்தியர்கள் மீது மீண்டும் நிறவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெல்பர்ன் நகரில் விக்டோரியா பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் வாக்கிங் சென்று கொண்டிருந்த 21 வயது இந்தியர் ஒருவரிடம், சைக்கிளில் வந்த 4 டீன் ஏஜ் இளைஞர்கள், ‘நீங்கள் இந்தியரா?’ என கேள்வி எழுப்பினர். இந்தியர் என தெரிந்ததும் கையில் இருந்த பேஸ்பால் மட்டையால் அவரை தாக்கினர். இதில் இந்தியரது முகம் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகிறார்கள். இதே பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு இந்தியர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை போலீசார் உறுதி செய்யவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தாக்குதல் ஆரம்பித்திருப்பது இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விக்டோரியா இந்தியர் கூட்டமைப்பின் தலைவர் வாசன் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘‘விக்டோரியாவில் பல இனங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் தாக்கப்படுவது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது’’ என்றார்.
இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமா?









No comments:
Post a Comment